கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான ப.தர்ஷானந்த், எஸ்.சொலமன், வி.பவானந்தன், க.ஜெனமேஜெயந் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்துக்கு முரணான வகையிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து, அதற்கான சட்ட வியாக்கியானங்களையும் அந்த மனுவில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளபோதிலும், அதிலுள்ள முக்கிய சில ஷரத்துகள் சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு புகுத்தப்பட்ட ஷரத்துகளுள் ஒன்றான 1721/5 விதியின் கீழேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.