செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தினத்தினை நினைவுகூர்ந்து வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும்.

அதற்கமைய இம்முறையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களான ஈசன் மற்றும் ரூபன் ஆகியோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த உத்தரவை மீறி நிகழ்வை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts