எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஒரு இனச்சுத்திகரப்பு என்று சொன்னால், ஒரு இனத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகச் செல்வது இனச்சுத்திரகரிப்பு அல்ல. அந்த இனத்தை demonization of ethnics groups எனச்செய்வதுதான் இனச்சுத்திகரிப்பு. பொஸ்னியாவை எடுத்துப்பார்தால், முஸ்லீமக்களை விரட்டுப் போது, பள்ளிவாசல்களை தாக்கினாhர்கள், அந்த சமூகத்துக்கு எதிரான எதிர்ப்பினை காட்டினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை முஸ்லீம்மக்களுக்கு எதிரான அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் பாதுகாப்பு கருத்தியே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் எனச்சுட்டிக்காட்டிய அந்த சம்பவம் இடம்பெற்றது எனக் குறிப்பிட்டதோடு, அந்தநேரத்தில் பல முஸ்லீம் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள். பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் முஸ்லீம் பெயர்களை கொண்டவர்களாக இருந்தார்கள் எனத் தெரிவித்தார்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டார்கள் என்ற கருத்துக்கு எந்தவிதமான சட்டத்தின்படியோ, தார்மீககோட்பாட்டின் படியோ பொருந்தாது. இவ்வாறான கருத்துக்களை எம்.ஏ.சுமந்திரன் கூறுவது தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது. இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் சிறிலங்காவின் நடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள் !!

” சிறிலங்கா பராளுமன்றத்திலோ, அதன் அரச கட்டமைப்பினுள்ளோ தமிழ தேசிய பிரச்னைக்கு தீர்வு காண இயலாது”

1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.

2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.

3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.

4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23. இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.

5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.

6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.

7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம் எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.

10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக் கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.

11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.
12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.

13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.

இதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.

அ – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் – தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

ஆ – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

இ – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

ஈ – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

உ. தாயகத்தில் தமிழர் தேச நிர்மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:

தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக் கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.

இத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர் தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.

அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும், தமிழர்களின் நலன்களையும் இணைக்கக் கூடிய அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல் மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Posts