இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி ) கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, இராசபாதை வீதியூடாக நல்லூர் பகுதியை நோக்கி சென்ற இராணுவத்தின் யூகா 50320 எனும் இலக்கமுடைய கப் ரக வாகனம் மோதி தள்ளியது. அதனால் கல்வியங்காடு பகுதியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளானார்.
இந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் அறிந்து அவ்விடத்திற்கு பொறுப்பதிகாரி தலைமையில் வந்திருந்த சீருடை அணிந்த பொலிஸார் மற்றும் சிவில் உடையில் வந்த பொலிஸார் விபத்து நடைபெற்ற இடத்தில் கூடியிருந்தவர்களை அங்கிருந்து மிரட்டி அனுப்பிவிட்டு காயத்திற்கு உள்ளான இளைஞனை கைது செய்தனர்.
பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் இளைஞனை ஏற்றியதுடன் , விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை சிவில் உடையில் வந்த பொலிஸார் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார்.
அதேவேளை விபத்துக்கு உள்ளான கார் மற்றும் இராணுவத்தின் வாகனம் என்பவற்றையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
விபத்து தொடர்பிலான எந்த விசாரணைகளும் இன்றி விபத்துக்கு உள்ளான வாகனத்தை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதனால், விபத்து நடைபெற்ற இடத்தில் நின்றவர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞனில் தவறில்லை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டனர். எனினும் பொலிஸார் எந்த பதிலும் அளிக்காமல் இளைஞனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
அதனால் அவ்விடத்தில் நின்றவர்களும் இளைஞனுடன் பொலிஸ் நிலையம் நோக்கி சென்ற போது , பொலிஸ் நிலைய வாயில் கதவை சாத்திய பொலிசார் விபத்திற்கு உள்ளான இளைஞனை மட்டும் பொலிஸ் நிலையத்தினுள் அழைத்து சென்று தடுத்து வைத்திருந்தனர்.
அதன் போது பொலிஸ் நிலையத்திற்குள் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் விபத்துக்கு உள்ளான இளைஞனை மிரட்டும் தொனியில் விசாரணை செய்ததுடன், இளைஞனின் விவரங்களையும் பெற்றுக்கொண்டனர். பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸாரின் காவலில் குறித்த இளைஞன் இருக்கும் போதே இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் இளைஞனின் தகவலை திரட்டினர்.
அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு இராணுவத்தின் கப்டன் தர அதிகாரியுடன் சிவில் உடையில் வந்த இராணுவ உயர் அதிகாரியொருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தனியே சந்தித்து கதைத்த பின்னர் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் கார் உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து மிரட்டும் தொனியில் கதைத்து விபத்து சம்பவம் தொடர்பில் சமரசமாக செல்ல நிர்பந்தித்துள்ளார்கள்.
அதேவேளை இராணுவ வாகனத்தில் தவறில்லை எனவும் , விரும்பின் காரின் செலவினை விபத்துக்கு உள்ளன இளைஞனிடம் இருந்து பெறும் மாறும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இராணுவத்தினர் தமது விபத்துக்கு உள்ளான வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து கார் உரிமையாளரும் விபத்துக்கு உள்ளான இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை பெற்ற பின்னர் தனது காரினை எடுத்து சென்றார். காரினை எடுத்து செல்ல முன்னதாக காரின் செலவீனம் சுமார் 25 ஆயிரம் வரும் எனவும் கூறி சென்றார்.
விபத்துக்கு உள்ளான இளைஞனின் காலில் விபத்தினால் வலி இருந்த போதிலும் பொலிஸார் அது தொடர்பில் எந்த கரிசனையும் இன்றி அவரை சுமார் இரண்டு மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற காரில் பொருத்தப்பட்டு இருந்த கமராவில் விபத்து சம்பவம் முழுமையாக பதிவாகியுள்ள போதிலும் , மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனின் மீதே பிழை என இராணுவத்தினரும் , பொலிஸாரும் சேர்ந்து குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை குறித்த இளைஞனை பொலிஸாரும் இராணுவத்தினரும் தனியே பொலிஸ் நிலையத்தினுள் தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனின் நண்பர் ஊடாக சட்டத்தரணி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சட்டத்தரணி பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டும் என கோரிய போதிலும் அவரை சந்திக்க முடியாது என பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள்.
அவ்வேளை விபத்துக்கு உள்ளான இளைஞன் அவ்விடத்திற்கு வந்த போது , இளைஞனிடம் சட்டத்தரணி சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்ட போது அங்கு சிவில் உடையில் நின்ற பொலிஸார் சட்டத்தரணியை இளைஞனுடன் கதைக்க விடாது தடுத்துள்ளனர். பொறுப்பதிகாரியின் அனுமதி இன்றி கதைக்க முடியாது என கூறி இளைஞனை சட்டத்தரணியுடன் கதைக்க அனுமதிக்காது தம்முடன் அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தினுள் இருத்தி வைத்தனர்.
இராணுவத்தினரின் வாகனம் மற்றும் காரினை விடுவித்த பொலிஸார் அரை மணி நேரம் கழித்து விபத்துக்கு உள்ளான இளைஞனை விடுவித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் கையளித்தனர்.
காரின் உரிமையாளர் காரின் செலவினை ஏற்குமாறு விபத்துக்கு உள்ளான இளைஞனிடம் தொலைபேசி ஊடாக கேட்பாராயின் தான் விபத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சந்திக்க தயார் என பாதிக்கப்பட்ட இளைஞன் கூறியுள்ளார்.
காரின் உரிமையாளர் விபத்து நடைபெற்ற இடத்தில் இளைஞனில் தவறில்லை என கூறிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ உயர் அதிகாரியுடன் கதைத்த பின்னர் இளைஞன் மீதே தவறு எனும் நிலைக்கு சென்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.