வரலாற்றுச் சிறப்புமிக்க அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் அங்கு அடியவர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்டது.
கோவிட் -19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் அன்னதானம் வழங்கல் நிறுத்தப்படவேண்டும் என்று ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அனலைதீவுக்கு நேரில் சென்று பணிப்பை வழங்கினர்.
அனலைதீவு நயினாகுளம் பூரணாதேவி, புஸ்கலாதேவி சமேத ஹரிகரபுத்திர (ஐயனார்) ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
கோவிட் -19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அமைய திருவிழா இடம்பெற்று வருவதுடன் முதலாம் திருவிழாவிலிருந்து நேற்று 5ஆம் தி்ருவிழா வரை அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
எனினும் உள்ளூரிலிருந்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து ஊர்காற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இன்று வியாழக்கிழமை ஆலயத்துக்குச் சென்றனர்.
“ஆலயத்தில் அன்னதானம் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் நடத்துவதாயின் பேப்பர் குவலையில் மட்டுமே வழங்க முடியும். இல்லாவிடின் தண்ணீர் பந்தல் நடத்த முடியாது.
வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் முகக் கவசம் அணிவது கட்டாயம்” போன்ற கட்டுப்பாடுகளை வழங்கிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆலயத்தலைவரிடம் கையொப்பம் பெற்றுச் சென்றனர்.
இதேவேளை, அன்னதான மடத்தில் உள்ள பொருள்களை வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்குமாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.