தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது, இந்தியப் பிரதமர் ஒரு செய்தியை அவருக்கு அனுப்பியிருந்தார்.
தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் சென்ற செய்தி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தமிழர்களின் பிரச்சினை நீதியின் அடிப்படையில் சமத்துவத்தின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும் என்ற செய்தி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களுக்கு இந்த செய்தி தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. இதுதான் நிலைமை.சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை வழங்கியபோது என்னவிதமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்பது பற்றி பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.
அது நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவிடம் 13ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டியெழுப்பபடுகின்ற கூடுதலான அதிகார பகிர்வுமூலமாகவும் ஒரு ஆக்கபூர்வமான நடைமுறைபடுத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவோம் என்று இந்தியாவிடம் கூறியிருந்தார்கள். அது நிறைவேற்றப்படவில்லை.
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உதவினார்கள். இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்திய குழுவொன்றும் இலங்கை குழுவொன்றும். மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் நாராயணன், சிவசங்கர்மேனன், இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர். அதேபோன்று இலங்கையின் சார்பில் லலித்வீரதுங்க, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியொர் நியமிக்கப்பட்டனர்.
இந்த இரண்டு குழுக்களும் யுத்ததினை எவ்வாறு முன்னெடுப்பது என்று பேசி தீர்மானங்களை எடுத்து அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் நடைபெற்று முடிந்தபோதிலும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை வழங்குவதற்கு தயங்குகின்றது. பின்நிற்கின்றது. இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது. இதனை இந்தியாவிடம் கேட்கவேண்டிய அவசியம் உண்டு. இதனை நிறைவேற்றி வைக்கவேண்டிய அவசியம் உண்டு” என அவர் மேலும் தெரிவித்தார்.