யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாணவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படும் விடயம், அவர்களது வீடுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டே இடம்பெறுவதால் இதுவரை எத்தனை மாணவர்கள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அறியமுடியவில்லை என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது :
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
கடந்தவாரம் விசாரணைக்காக நான்கு மாணவிகளை வருமாறு பயங்கரவாதப் பொலிஸார் அறிவித்தனர். பின்னர் இரண்டு மாணவிகளை மாத்திரம் வவுனியாவுக்கு வரும்படியும், ஏனைய இருவரும் விசாரணைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
ஆனால் விசாரணைக்கு தேவையில்லை என்று கூறியிருந்த அந்த இரண்டு மாணவிகளையும் மறுநாள் வவுனியாவுக்கு அழைத்த பொலிஸார் அவர்களை விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
எமக்குக் கிடைத்த தகவலின்படி அன்றைய தினத்துக்கு முதல் நாள் 5 மாணவிகளும், மறுநாள் இரண்டு மாணவிகளும் அதற்கு அடுத்த நாள் மூன்று மாணவிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாளாந்தம் ஆண் மாணவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஊடாக அல்லாமல் மாணவர்களிடமே தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் நேரடியாகப் பொலிஸார் தொடர்புகொண்டு விசாரணைக்கு அழைக்கின்றனர்.
இதனால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை சரிவரக் கூறமுடியாமல் உள்ளது. ஆயினும் மாணவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகின்றனர் என்பது மாத்திரம் உறுதியாகத் தெரியவருகிறது என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.