“இராமன் முஸ்லிம்களின் நபி, இராவணன் முஸ்லிம் மன்னன்” இது தான் உண்மை- மௌலவி முபாறக்

“இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம். இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது” என்று உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் வரலாற்று சர்ச்சைகளும் சில தேரர்களினால் எழுப்பப்படும் நிலமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (14) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது. கோணேச்சர ஆலயம் பௌத்த ஆலயம் என பௌத்த தேரர் குறிப்பிட்ட கருத்தினை முன்வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நான் பதில் வழங்குகையில் இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்தேன்.

கோணேச்சர ஆலயத்தை முன்னிறுத்தும் போது அதனுடன் இராவணனின் பெயரும் சேர்ந்து பேசப்படும். இராவணன் முஸ்லிம் என்பதனை நாங்கள் நம்புகின்றோம் . சுமார் 2 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் மூலம் பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என வரலாறு சொல்லுகின்றது. விஜயனின் வருகைக்கு முன்னர் கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டது. இந்த பகுதியில் நாற்பது அடியில் இரண்டு சமாதிகள் உள்ளன.

விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்தவர்கள் ஆதாமின் வாரிசுகள் என்பதை நம்புகின்றோம். அதனடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த இராவணனும் ஆதாமின் வாரிசு என்பதனை நம்புகிறோம் .இந்திய சீக்கிய ஆய்வாளர் ஒருவர் கூட திருகோணமலை உள்ள இராவணன் சமாதி மற்றும் தாயாரது சமாதி என்பதனை குறிப்பிட்டுள்ளார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது.

இராவணன் சமாதி நாற்பது அடி என்றால் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவராக இருக்க முடியாது மாறாக 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும்.

முதல் மனிதன் 60 முழம் கொண்டவனாக படைக்கப்பட்டான் என இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இது முஸ்லிம் நல்லடியார்களின் சமாதி என்று முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டது.

இராவணன் என்ற பெயர் எகிப்திய மன்னர்களுக்கு வைக்கப்பட பெயரை ஒத்ததாக உள்ளது . இராவணன் என்ற பெயருக்கு தமிழ் மற்றும் வட இந்திய மொழிகளில் அர்த்தமில்லை. ஆதலால் காலங்களில் மத்திய கிழக்கு பகுதியில் பிர்ராவுன் என்ற மன்னன் வாழ்ந்தான் அங்கு மன்னர்களுக்கு ராவுன் என்றே அழைக்கப்பட்டனர்.

இதனுடன் தொடர்புடைய இராமன், சீதை, அனுமான் போன்ற பெயர்களுக்கும் வட இந்தி மொழிக்கும் தொடர்பில்லை என்றே கூறுவேன். ஆனால் அராபிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.

இராமனை ரஹ்மான் என்றும் சீதா என்பதை செய்யீதா இலக்குமணன் _ லுக்மான் அனுமான் என்பது நூமான் என்று ஏன் இவ்வளவு ஒற்றுமை இருக்க வேண்டும்.

பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.

அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம்.

இஸ்லாம் என்பது சிலர் சொல்லுவது போன்று 1400 ஆண்டுகளுக்கு முன் வந்ததல்ல ஆதாம் காலத்தில் இஸ்லாம் இருந்ததாக நம்புகிறோம்.அந்த வரலாற்று தகவலோடு பின்னி பிணைந்து பார்க்கும் போது இராவணன் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம்.

இவற்றை வைத்துதான் நான் கூறுகின்றேன். கோணேச்சரம் ஆலயம் பௌத்த ஆலயம் என பௌத்த துறவி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக இருந்தது இந்த சூட்டை தணிப்பதற்கு நாங்கள் ஆதரபூர்வமாக கூறிய கருத்தாகதான் இதனை பார்க்க வேண்டும்.

எனவே தான் கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும் – என்றார்

Related Posts