டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு குறித்த டிப்பர் வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக இதனை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Posts