கல்வி அமைச்சின் தீர்மானத்தால் கடும் சிரமம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோரும் ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அத்துடன் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (11.06.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொராேனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கின்ற நிலையில், அரசாங்கம் அரசியல் நோக்கத்துக்காக பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.

அத்துடன் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ள நேருகின்றனர். இதுதொடர்பாக எமது எதிர்ப்பபை தெரிவித்து கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

குறிப்பாக அடுத்தவருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் தற்போது 12 ஆம் தரத்தில் கல்வி கற்றுவருகின்றனர்.

பாடசாலைகள் மூடப்பட்டதால் இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் 4 மாதங்களாக இல்லாமல்போயுள்ளன. அதனால் மாணவர்களை பாடசாலைக்கு எடுக்கும் முதல் கட்டத்தில் இந்த மாணவர்களையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பாடசாலை நேரம் முடிவடையும் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மாணவர்களும் அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்லவரும் பெற்றோரும் பாதிக்கப்படப்போகின்றனர். அதேபோன்று பாடசாலை சேவை மேற்கொள்ளும் வாகனங்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகப்போகின்றன.

அத்துடன் பாடசாலை முடிவடையும் நேரம் வகுப்புகள் அடிப்படையில் வித்தியாசப்படுவதால், பிள்ளைகள் வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆசிரியர்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

அதேபோன்று வெவ்வேறு நேரங்களில் பாடசாலை நேரம் முடிவடைவதால் பாடசாலை சேவை வாகனம் மற்றும் சிசு செரிய பஸ் சேவைகள் அந்ததந்த நேரங்களில் செயற்படுவதில்லை. அதனால் பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துக்கொள்வது பெற்றோர்களுக்கும் பிரச்சினையாகும்.

எனவே பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு கருத்திற்கொள்ளாமலே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அதனால் இந்த தீர்மானம் தொடர்பாக கல்வி அமைச்சர் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

Related Posts