உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி – சித்த ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் நிரஞ்சன் தெரிவித்தார்.

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நோய்வந்த பின்னர் அதற்கான மருந்துகளை தேடி அலைவதை விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது இதனையே சித்த மருத்துவத் துறையானது வலியுறுத்தி வருகின்றது.

உலகநாடுகள் தனி நபர் சுகாதாரம், சுற்றுச் சூழல் சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியினை பேணுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக மக்களை நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்ளமுடியும் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் இந்நிலையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என உலக நாடுகள் இப்போது ஏற்றுக்கொண்ட ஒரு விடையமாக மாறியுள்ளது.

எமது உணவு மற்றும் வாழ்க்கையின் நடைமுறைகளின் ஊடாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் குறிப்பாக, காலைத் தேனீரில் இஞ்சி, மஞ்சள் அல்லது துளசி சேர்த்துக்கொள்வதன் மூலமும் உணவுகளில் இலைக்கஞ்சி, தானிய வகைகள், குரக்கன், சாமை, திணை, சோயா, உழுந்து போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமும், மோர், இயற்கைப்பழச்சாறு, வில்வம்பழப் பாணம் என்பவற்றை பருகுவதன் ஊடாகவும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்

மேலும் மஞ்சள், வேப்பம் இலை, மா இலை போன்றவற்றை பயன்படுத்தி எமது சுற்றுச் சூழலினையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டார்.

Related Posts