யாழ்ப்பாணம் திருநெல்வேலி, முடமாவடிப் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பகுதியில் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய போதும் காலை 6 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
இந் நிலையில் குறித்த இடத்திலிருந்து முதலை இராமலிங்கம் வீதியில் உள்ள பூக்கன்றுகள் விற்பனை செய்யும் கடையின் வளவுக்குள் புகுந்து கொண்டது.
இது தொடர்பில் பொலிஸாரினால் வன விலங்குத் திணைக்கள ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக குறித்த இடத்துக்கு வருகை தந்த வன விலங்குத் திணைக்கள ஊழியர்கள் முதலையைப் பிடித்து தமது வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
இதேவேளை அண்மையில் யாழ்.கல்வியங்காடு பூதவராயர் குளத்துக்குள் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு, நல்லூர் பிரதேச சபையினால் எச்சரிக்கைப் பதாகை ஒன்றும் அக் குளத்துக்கு அண்மையில் நாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரன் குறித்த முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதுடன், அப் பகுதி மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
குறித்த குளத்துக்குள் இருந்த முதலைகளில் ஒன்றே இன்று அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.