உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.
உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று மறுநாள்) ஊரடங்கு நடைமுறைப்படுத்திருந்த வேளை, இரவு 11 மணியளவில் இரண்டு பேர் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியுள்ளனர்.
அவர்கள் இரண்டு பேரையும் அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி விசாரித்ததுடன், கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்ட முதியவரை அழைத்து சந்தேக நபர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
அவர்கள் ஒருவர் தன்னைத் தாக்கியவர் என்றும் பாட்டா செருப்புடன் சமையல் அறைக்குள் சென்றவர் அவர்தான் என்றும் அந்த முதியவர் அடையாளம் காட்டியுள்ளார்.
அதனால் சந்தேக நபர்கள் இருவரையும் உடுவில் இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்போது முதியவரால் அடையாளம் காட்டப்பட்டவரின் உடமையில் கஞ்சா பொதி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற சுன்னாகம் பொலிஸார், மறுநாளான நேற்று மல்லாம் நீதிவானுக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தில் முற்படுத்தி, சிறியளவு கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மட்டும் முன்வைத்து பிணையில் விடுவிக்க அனுமதி வாங்கினர்.
இதனால் பிணையில் வந்த சந்தேக நபர் தன்னை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தோரை அச்சுறுத்தலுக்கு உள்படுத்தி வருகின்றார்.
இதுதொடர்பில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு வலி. தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தவராசா துவாரகன் கொண்டு சென்றிருந்தார்.
உடனடியாகவே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் குழு அமைத்து விசாரணை நடத்துவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவாதமளித்துள்ளார்.
அத்துடன், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்குவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.