நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
உலகையே அச்சுறுத்திவரும் கோரோனா வைரஸ் நோயானது தற்போது எமது நாட்டிலும் வேகமாக பரவி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
கோரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- இயலுமானவரை பொது இடங்களுக்கு செல்வதையும் அவசியமின்றி மக்கள் கூடுமிடங்களுக்கு சென்று வருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- அத்தியாவசிய பொருள்கள் கொள்வனவிற்கு அல்லது வேறு அவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியே செல்லுங்கள்.
- நீண்ட கால நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கோரோனா வைரஸினால் இலகுவில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் இவ்வாறானவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கூடியவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- எப்போதும் நீங்கள் மற்றவர்களிலிருந்து ஆகக்குறைந்தது 3 அடி தூரத்திலிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டிற்கு திரும்பியதும் சவர்க்காரமிட்டு கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
- நீங்கள் வெளியே செல்லும் போது எப்போதும் சரியான முறையில் முகக்கவசங்களை அணிந்து கொள்வது கோரோனா தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
கோரோனா தொடர்பில் விழிப்பாயிருங்கள். அச்சமடைய வேண்டாம்
தகவல்: சுகாதாரத் திணைக்களம்