பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்- யாழ்.பல்கலை மருத்துவ பீடாதிபதி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ பீடம் கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியாக செய்துவந்தது.

ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்னர், அதாவது கடந்த திங்கட்கிழமை தொடங்கி யாழ். போதனா வைத்தியசாலையிலும் இந்தப் பரிசோதனை செய்யப்படுகின்றது.

இதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனை தொடங்கிய அன்றும், அதற்கு முதல்நாளும் உட்கட்டமைப்பில் மாற்றம் செய்யவேண்டி இருந்தமையால் யாழ். பல்கலையில் இந்த பரிசோதனைகளை 2 நாட்களுக்கு இடைநிறுத்தி வைத்தோம்.

அந்த இரண்டு நாட்களும் எமது சிரேஷ்ட விரிவுரையாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தொடக்கிவைத்தார்கள். ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவே வைத்தியசாலையிலும் மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே, பல்கலை மாணவர்களோ, சமூகமோ அல்லது எங்களது ஊழியர்களோ எவ்வித பயமும் கொள்ளத் தேவையில்லை. இந்நிலையில் இங்கு தொற்று என்ற உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பிவருவதையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்.

இந்நிலையில், நாம் கொரோனா பரிசோதனைகளை தடையின்றியும், தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஊடகங்கள் உட்பட அனைவரும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts