கோவிட் -19 நோயால் இன்று உயிரிழந்த பெண், சுமார் ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்துள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மோதரை வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 9ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.
கோரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இறந்த இரண்டாவது பெண்மணி இவராவார். இந்தப் பெண் சுமார் ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் நிலை மோசமடைந்ததால் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அந்தப் பெண் இன்று மதியம் 12.50 மணியளவில் இறந்துவிட்டார்.
இதேவேளை, கோரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.