தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்கள் உள்ள குடும்பங்கள், ஆடைத் துறை உள்ளிட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு இடர்கால உதவித் தொகையான 5 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் அன்டன் பெரேராவால் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதார உழைப்பையிழந்த குடும்பங்களுக்கு அரசால் 5 ஆயிரம் ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது.
இந்தக் கொடுப்பனவு நிபந்தனைகளால் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்காத உண்மையில் நிதி நெருக்கடியில் உள்ள மேலும் சில குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவை வழங்க பிரதமரின் அலுவலகத்தால் பிரிஎப்/03/2020 (v) என்ற புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ள நபர்கள் உள்ள குடும்ப அலகுகளின் வெளிநாடு சென்றுள்ள அங்கத்தவர் அல்லது அங்கத்தவர்கள் தமது குடும்ப அலகுகளுக்கு பணம் அனுப்பவில்லை என்பதனையும் முன் சேமிப்புகள் இல்லை என்பதனையும் உறுதிப்படுத்துவதற்காக தாமே தயாரித்த உறுதிப்படுத்தல் ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் போது, பயன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர் என கிராமியக் குழு தீர்மானிக்குமாயின் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியும்.
மேலும் ஆடைத்துறை உள்பட பல்வேறுபட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்ப அலகுகள் ஏப்ரல் மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதனை அல்லது செலுத்தப்பட்ட சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவானது என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தாமே தயாரித்த உறுதிப்படுத்தல் ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் போது, பயன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர் என கிராமியக் குழு தீர்மானிக்குமாயின் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியும்.
அத்துடன், தோட்டத்துறை அமய அல்லது பதிலீட்டு அல்லது தற்காலிக அடிப்படையில் சேவையாற்றுகின்ற தமது நாளாந்த அல்லது மாதாந்த வருமானத்தை இழந்த குடும்ப அலகுகளுக்கு கொடுப்பனவைச் செலுத்தும் போது, அவர்கள் தாமே தயாரித்த உறுதிப்படுத்தல் ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் போது, பயன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர் என கிராமியக் குழு தீர்மானிக்குமாயின் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியும் – என்றுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இந்த விடயத்துக்குள் அடங்குகின்ற இதுவரை இடர்காலக் கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது கிராம அலுவலகரைத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கேட்டுள்ளார்.