அராலியில் பொலிஸார் குடும்பஸ்த்தர் மீது தாக்குதல்!!

உரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அயல் வீட்டாருடன் பேசியதற்காக இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நுழைந்து பொலிஸார் அட்டகாசம் புரிந்திருப்பதுடன், குடும்ப தலைவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர்.

crime scene tape focus on word ‘crime’ in cenematic dark tone with copy space

இந்த சம்பவம் அராலி மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சரமாரியாகத் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.இளம் குடும்பத்தலைவரின் வீட்டில் நேற்று இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

அந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் அறுவர் திடீரென்று அவரது வீட்டுக்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வைத்துள்ளாய் வாக்குவாதப்பட்டனர். அதேநேரம், அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆள் அடையாள அட்டையைக் கேட்டனர்.

அவரது மனைவி ஆளடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், பொலிஸாருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி பொலிஸார் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கினர்.

பொலிஸாரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு குருதி அளவுக்கதிகமாகப் பீறிடவே அவர் மயங்கிவிட்டார். அவரை மோட்டார் சைக்கிளில் தூக்கி ஏற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயன்ற வேளை, அவரது மனைவி கூக்குரலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கம் பக்கத்து ஆண், பெண் இருபாலாரையும் பொலிஸார் துரத்தித் துரத்திக் கடுமையாகத் தாக்கினர். தமது ஆடைகளைக் கூட பொலிஸார் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.இவ்வாறு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகளைப் பொறுக்கமாட்டாது ஆத்திரமுற்ற அப்பகுதி இளைஞர்கள் பொலிஸாரைத் தாக்கத் திரண்டு வந்து கற்களால் எறிந்தமையை பொலிஸார் காணொலி எடுத்ததாகவும் அவர்கள் கூறினர். உங்கள் அடாவடியை ஊடகங்களுக்குச் சொல்லுவோம் என்று அவர்கள் கதறிய வண்ணம் கூற, இது தொடர்பில் ஊடகங்களுக்கு எதுவும் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்வீர்களாக இருந்தால், நீங்கள்தான் எங்களைத் தாக்கினீர்கள் என்று ஊடகங்களுக்கு நாங்கள் சொல்வோம். அதற்கு எம்மிடம் காணொலி ஆதாரம் உண்டு என்று பொலிஸார் மிரட்டியதாகவும் மக்கள் கூறினர். அத்துடன், அத்தனை பொலிஸாரும் மதுபோதையில் நின்றனர் என்றும் கூறினர்.

என் கணவர் கடற்றொழில் செய்பவர். பொலிஸார் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரைச் சாகுமளவுக்குப் பொலிஸார் கொட்டன் தடிகளால் அடித்தனர் என்று கூறி அவரது மனைவி கதறினார்.

இதுதொடர்பில் கேட்பதற்குச் சம்பவ இடத்தில் நின்ற பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்குத் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தும், அவர்களிடமிருந்து பதிலில்லை.

ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி அண்மைக்காலமாக அராலிப் பகுதியில் இந்திய பொலிஸாரின் பாணியில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் அடாவடி செய்வதாகப் பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்களின் சைக்கிள் ரயர்களை வெட்டி எறிவது, சைக்கிள் வாற்கட்டையைப் பிடுங்கி எறிவது, சைக்கிள்களை தூக்கி வீசுவது, வீட்டு வாசலுக்கு முன் இருப்பவர்களுக்கு அடிப்பதுடன் கதிரைகளை உடைப்பது, கடமையில் இல்லாத பொலிஸார் ரோந்து சென்று இளைஞர்களைத் தாக்குவது, மதுபோதையில் கடமை மேற்கொள்வது, பெண்களுக்கு அடிப்பது என்று அன்றாடம் இவர்களின் அடாவடிச் செயல்கள் நீள்கின்றன.

பொதுமக்களைப் பாதுகாக்கவே பொலிஸார் மற்றும் சட்டம் உள்ள அதேவேளை, வேலிகளே பயிரை மேயும் அவலங்கள் வடக்கில் இடம்பெற்றவண்ணமுள்ளன. இதற்கு எந்தக் குற்றமும் செய்யாத குறித்த குடும்பத்தலைவர் எடுத்துக்காட்டு.

அவரைக் கடுமையாகப் பொலிஸார் தாக்கியமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Related Posts