கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது கோரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான கிளினிக்குகள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் தொடர்ந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நாளாந்த ஊடக சந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இவற்றைத் தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான சுற்றறிக்கையும்வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கிளினிக்குகளில் நோயாளர்களின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்நது வருவதாகவும் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான கிளினிக்குகளுக்கு தந்தையைத் தவிர்த்து தாய் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.