Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி!!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் நல்லூர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 23 பேரினதும் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 17 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு கடந்த மாத முற்பகுதியில் வருகை தந்த மத போதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேர் மார்ச் 22ஆம் திகதி பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட ஏனைய 14 பேருக்கு நோய் அறிகுறி இல்லாத போதும் முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 6 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர்.

14 பேரில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. 8 பேரும் கோரோனா சிகிச்சைப் பிரிவுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர். ஏனைய 6 பேரில் 3 பேருக்கு இன்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts