உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 185 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் தமது பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்து உதவித் திட்டத்தை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கூடியிருந்த மக்களை வீடுகளுக்குத் திருப்பினர்.
அத்துடன், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மக்களுக்குரிய உதவித் திட்டங்களை அவர்களின் இடங்களுக்குச் சென்ற விரைவாக வழங்கி வைக்குமாறும் பொதுச் சுகாதார பரிசோதகர், சமுர்த்தி அலுவலகருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த மக்களை ஒன்று கூடவேண்டாம் என்று அரசு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அத்துடன், மக்களுக்கு உரிய உலர் உணவு உள்ளிட்ட உதவித் திட்டங்களை அவர்களது இடங்களுக்குக் கொண்டு சென்று விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 185 கிராம அலுவலகர் பிரிவு மக்கள் உடுவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்துக்கு நேற்று பிற்பகல் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தரால் அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் அங்கு கூடியுள்ளனர்.
மக்கள் அங்கு திரண்ட நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) வலி. தெற்கு பிரதேச சபை பெண் உறுப்பினரும் அங்கு அழைக்கப்பட்டு உதவித் திட்டம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அறிந்த வலி. தெற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், அங்கு விரைந்து சுமார் 300 பேர் ஓர் இடத்தில் கூட்டப்பட்டிருப்பதை கண்டு மக்களை வீடுகளுக்குத் திரும்பினர்.
இதேவேளை, ஜே 185 கிராம அலுவலகர் பிரிவில் குடும்பம் ஒன்று சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.