அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் கடமையில் உள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் திணைக்களம் – நிறுவனத் தலைவர் அல்லது பிரதித் தலைவரின் முத்திரையிடப்பட்ட ஒப்பத்துடன் கூடிய கடிதம் வைத்திருத்தல்வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நடைமுறை மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நாளைமறுதினம் 10ஆம் திகதிவரை தமது தொழில் அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் தமது தொழில் அடையாள அட்டையை துஷ்பிரயோகம் செய்வதனால் அத்தியாவசிய சேவையில் ஊழியர் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு திணைக்களம் – நிறுவனத் தலைவர் அல்லது பிரதித் தலைவரின் கடிதம் கோரப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிப்பத்திரம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.