கடுமையான நோய்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும்; அச்சமடையத் தேவையில்லை – பணிப்பாளர்

கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

“எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால் கோரோனா தொற்று ஏற்படும் என்று அச்சமடையத் தேவையில்லை. சாதாரண நோய்களுக்கு பிரதேச வைத்தியசாலைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பெரியளவிலான நோய்களுக்கு கட்டாயம் போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவகப் பகுதி , தென்மராட்சி, வடமராட்சி ,மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இருதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்ததாவது;

கோரோனா தொற்று பரவல் நிலை ஏற்பட்ட பின்னர் மாதாந்த சிகிச்சைகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நிறுத்தப்பட்டன. அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவர்கள் அந்தந்த நோயாளிகளுக்கும் இருந்திருக்கும் முறையின் கீழ், விரைவாக தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுக்கு மருந்து வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் – என்றார்.

Related Posts