ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் செய்வது ஆசிரிய சங்கத்தின் வேலையல்ல என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் எந்தப் பாகத்திலும் இல்லாத அளவிற்கு வடமாகாணத்தில் இடமாற்றங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றதால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் தொடர் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
அதேவேளை, இடமாற்றங்கள் ரத்து செய்கின்றார்கள், முறைகேடுகள் என்கின்றார்கள், தென்பகுதியில் இடமாற்றத்தினை செய்யமுடியாதவர்கள் தேசிய இடமாற்றக் கொள்கைகளுக்கு முரணாக வடமாகாணத்தில் இடமாற்றங்களை திணிப்பது ஏனென்று பலருக்கு புரிந்திருந்தாலும், சிலருக்கு புரியாமல் இருப்பது வேதனை அளிக்கின்றது.
தேசிய இடமாற்றக் கொள்கையானது அமைச்சரவை அங்கீகாரத்துடன் வெளியிடப்படும் சுற்றுநிருபம் அதனை உதாசீனம் செய்து ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக, கால அவகாசமில்லாமல் இடமாற்றங்கள் செய்வது எவ்வளவு பாரதூரமானது என்பதனை புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிஷ்டமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர்களுக்க ஏற்படும் இடர்பாடுகளை நீக்கி அவர்களின் சுயமான கற்பித்தலுக்கு உதவுவது ஆசிரிய தொழிற்சங்கத்தின் கடமையாகும். அதனை நிராகரிப்பது, இடமாற்றக் கொள்கைக்கு மாறாக, வலுக்கட்டாயமாக தகுதியில்லாத, வயது முதிர்ந்த, குழந்தைகளையுடைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஆசிரிய தொழிற்சங்கத்தின் வேலையல்ல. ஒரு ஆசிரிய தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கம் ஆசிரியரை இன்னொரு தொழிற்சங்கம் பழிவாங்குவதை பொறுக்க முடியாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழுவருட ஆசிரிய இடமாற்றம் கூட தேசிய இடமாற்ற சுற்றுநிருபத்தில் இடம்பெறாத ஒன்று. அதேவேளை, தமிழ் பிரதேசங்களின் கல்வியை பாதாளத்தில் தள்ளிவிடவேண்டுமென்பதற்காக திட்டமிட்டுச் செய்யப்படும் நாசகாரச் செயலை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.