யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்தில், “உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்களை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒரு அம்சமாகவே நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் குறித்த ஊரடங்குச் சட்ட நோக்கத்தை முழுமைப்படுத்த முடியாத வகையில் மீன்பிடி செயற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. அதாவது யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோரப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தமது மீன்பிடிச் செயற்பாடுகளை வழமை போன்று தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஊரடங்கின் போதும் மக்கள் அதிகளவில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் இவ்வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் ஒரு மரணமும் பதிவாகியிருக்கின்ற இக்கால கட்டத்தில் மாநகர கரையோரப் பகுதி மீன்பிடி செயற்பாடானது எமது மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாகவும் எதிர்பார்க்காத வகையில் பாரிய வைரஸ் தொற்று விளைவுகளையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என அச்சம் ஏற்படுகிறது.
எனவே யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான பகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் அனைத்துவிதமான மீன்பிடிச் செயற்பாடுகளையும் உடன் நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக தடை விதிப்பதற்கான அறிவுறுத்தல்களைத் தாமதிக்காது உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், யாழ். பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் பரிசோதகர், வட. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கொழும்புத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குருநகர் ஐக்கிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், நாவாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.