Ad Widget

இல்லாதவர்களுக்கு உதவுவோம் – விக்னேஸ்வரன் அழைப்பு

இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா தோற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருள்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஏராளமான குடும்பங்கள் தமது நாளாந்த உணவினை பெற்றுக்கொள்வதற்குப் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுவருவதாக அறிய முடிகின்றது.

இந்த மக்களின் துன்பங்களை போக்குவதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுத்திருப்பதாக நான் அறியவில்லை. அரசு சில நடவடிக்கைகளை எடுத்தால் கூட அவை இந்த மக்களின் துன்பங்களை முழுமையாக போக்கும் வகையில் அமையப்போவதில்லை. ஆனால், நாம் அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் என்ற உணர்வுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் எமது சக உறவுகள் பசியிலும் பட்டினியிலும் வீழ்ந்து விடாமல் கை கொடுத்து உதவ வேண்டியது எமது கடமை.

ஒவ்வொருவரும் உங்களை சுற்றி இருக்கும் ஏழை எளியவர்கள் உணவு உண்ணுகின்றார்களா, அவர்களின் குழந்தைகள் பிள்ளைகளுக்கு பால் மாவும், வயோதிபர்களுக்கு மருந்துகளும் கிடைக்கின்றனவா என்று ஆராய்ந்து பாருங்கள். மனிதாபிமான உணர்வுடனும் சகோதர பாசத்துடனும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எனதினிய உறவுகளே! உங்களால் முடிந்தளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு உதவிசெய்யும் நிலமை உங்களுக்கு இல்லை என்றால் உதவி செய்யக் கூடியவர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ அவர்களின் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களையும் கொரோனா நெருக்கடியினால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுகின்ற அல்லது ஆதரவு அளிக்கின்ற நடைமுறைகளை வர்த்தகர்கள் பின்பற்றவேண்டும்.

வெளிநாடுகளில் கடை திறந்த முதல் இரண்டு மணி நேரங்களில் முதியவர்கள் தமக்கு தேவையான பொருள்களை கொள்வனவு செய்வதற்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற பொருள்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, ஏழை மக்கள் அத்தியாவசிய பொருள்களை நியாயமான அல்லது குறைந்த அத்தியாவசிய விலையில் பொருள்களை பெற்றுக்கொள்வதற்கு மனச்சாட்சியின்படி நாங்கள். நடந்து கொள்வோமாக!

அதேபோல, செல்வந்தர்களும் நன்கொடையாளர்களும் புலம் பெயர் உறவுகளும் உதவி அமைப்புக்களின் ஊடாக இந்த மக்களுக்கு கை கொடுப்பதற்கு முன்வரவேண்டும். சில உதவி அமைப்புக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உதவி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், இருப்பவர்களிடம் அவர்கள் உதவிகளை வேண்டி நிற்கின்றார்கள்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ நாம் அனைவரும் மேற்கொள்ளும் சிறு சிறு உதவிகள் இந்த மனிதாபிமான நெருக்கடியினைக் களைவதற்கு நிச்சயம் உதவ முடியும். யுத்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்கு எமது பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் சாரணிய குழுக்களாகவும் ஏனைய பல மாணவர் அமைப்புக்களாகவும் செயற்பட்டு மகத்தான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக நான் அறிகின்றேன். அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி நிலைமையினைத் தீர்ப்பதற்கு எமது இளையோர்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களும் உயர் கல்லூரி மாணவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளமுன்வர வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல்களின் கீழ் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

நிச்சயமாக இத்தகைய நடவடிக்கைகளுக்கு எமது நன்கொடையாளர்களும் புலம்பெயர் உறவுகளும் உதவி செய்வார்கள் என்று நம்புகின்றேன். எமது நம்பிக்கைப்பொறுப்பும் இது பற்றி ஆராய்ந்து வருகின்றது.

Related Posts