2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 22 மாவட்ட செயலகங்களில் இன்று ஆரம்பமாகுகின்றது.
இதற்கமைவாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை வார நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். அரசியல் கட்சியொன்றில் செயலாளரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் அல்லது குழுவின் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இருவருடன் நான்கு பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்ய வர முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுயாதீன குழுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை மாவட்ட செயலகங்களில் கட்டுப்பணம் செலுத்தலாம். பொதுத் தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அனைத்து இடங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆரம்பமாகும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் கூறினார்.