நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கும் மன்னார், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் விஷேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் சுகாதார நலன் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள விஷேட அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதன்போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலநிலையால் சிறுவர்கள், வயதானவர்கள், நீண்ட காலமாக இருதய நோய்க்குள்ளாகியிருப்பவர்கள் மற்றும் நுரையீரல் நோய்க்குட்பட்டவர்கள் விரைவாக பாதிக்கப்படுவார்கள்.
அதிக வெப்பத்தால் வெப்ப அழுத்தம் (Heat Stress), சதைப்பிடிப்பு (Heat Cramps), வெப்ப பக்கவாதம் (Heat Stroke) என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நிழலான அல்லது குளிர்மையான இடங்களில் ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தளவு தண்ணீர் அருந்துதல் வேண்டும். அத்தோடு உடலில் சதையுள்ள பகுதிகளில் துடிப்பு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் அல்லது பதற்றமாக இருத்தல், மயக்கம் போன்றவை காணப்பட்டால் ஆடைகளை இலகுவாக்கி ஓய்வெடுக்க வேண்டும்.
ஏனைய சில நாடுகளில் இவ்வாறு அதிகரித்த வெப்பத்தினால் உயிரிழப்புக்கள் பதிவாகியிருக்கின்றன. எனவே இலங்கையில் உயிரிழப்புக்களை தடுப்பதற்காக நீண்டகால மற்றும் குறுகியகால நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய குறுகியகால வேலைத்திட்டங்களாக தடங்கலின்றி குடிநீர் வழங்குதல், சீனி அதிகமுடைய குடிநீர் பானங்கள் கூடுதலாக பருகுவதைத் தவிர்த்தல், கூடுதல் வெப்பம் நிலவும் நேரமான முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் அல்லது வெளியில் செல்லும்போது தொப்பியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேபோன்று நீண்டகால வேலைத்திட்டங்களாக சிக்கனமான முறையில் நீரைப் பயன்படுத்த அறிவுறுத்தல், அநாவசியமாக மின்சார விரயத்தைக் குறைத்தல், மின் உபகரணங்களின் பாவனையைக் குறைத்தல், குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழிகளை கையாளுதல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
சுகாதார பாதிப்புக்கள் தொடர்பில் 071-0107107 என்ற சுகாதார அமைச்சின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு மும்மொழிகளிலும் பொதுமக்கள் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.