அரசாங்க பாடசாலைகளில் அடுத்தவருடம் முதல், முதலாம் தவணைப் பரீட்சை இரத்து

அரசாங்க பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில், முதலாம் தவணைப் பரீட்சையை நடத்துவதில்லையென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி மற்றும் வேறு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனால் இக்காலப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள், முதலாம் தவணை பரீட்சையின் போது எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி பரீட்சைகளுக்கு தோற்றுவதாகவும், ஒரு சில மாணவர்கள் பரீட்சைகளில் பின்தங்கலாம் எனக் கருதி, கல்விச் சுற்றுலா, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட விடயங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலைமைகள் அதிகமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிவதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு சில மாணவர்களின் பெற்றோர்கள் தலையீடு செய்து, அவர்களை விளையாட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

கற்றல் கற்பித்தலுடன் பல்வேறு செயற்பாடுகளும் இடம்பெறுவதால், பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் முதலாம் தவணை பாடசாலை காலப்பகுதியின் போது அதிக வேலைப்பழுவுடன் காணப்படுகின்றனர்.

இவ்வாறான அனைத்து காரணங்களையும் கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் முதலாம் தவணையின் போது அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இருப்பினும் இவ்வருடத்திற்கான முதலாம் தவனை பரீட்சையை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் முதலாம் தவணை பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts