யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
அவ்வேளை அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்ட நபரொருவர் தன்னை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அறிமுகம் செய்து கொண்டு , “எனக்கு அவரசமாக 25ஆயிரம் ரூபாய் பணம் தேவை. நீர் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டேன். அவர் நீர் தான் தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதாக கூறினார். அவசரமாக எனக்கு பணம் தேவையாக உள்ளதால் அருகில் எங்காவது ஈஸி காஸ் (ez case) மூலம் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு பணம் அனுப்பு ” என கூறியுள்ளார்.
அதனை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அலைபேசி இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடம் கூறிய போதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக ஈஸி காஸ் (ez case) மூலம் மோசடியாக பணம் பெற்று வரும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன. அது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்ட போது ,
“இந்த மோசடி கும்பல்கள் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றனர். இவ்வாறான தொகைக்கு பெரும்பாலனவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். சிலர் முறைப்பாடுகள் செய்கின்றனர்.
அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட அலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருக்கும். அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களில் இருக்கும் அல்லது உயிரிழந்த நபர்களின் பெயர்களில் இருக்கும். அதனால் எமது விசாரணைகள் தடைப்பட்டு விடும்.
மோசடி நபர்களை நெருங்குவதில் தடைகள் உண்டு. அதேவேளை இவர்கள் மோசடியாக பெறும் பணத்தின் தொகை சிறிதாக இருப்பதனாலும் விசாரணைகளில் சில சிக்கல்கள் உண்டு.
இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும். தெரியாத நபர்கள் , புதிய அலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்கு பணம் செலுத்தாதீர்கள்.
அதேவேளை அதிஸ்டம் விழுந்துள்ளது என வரும் குறுந்தகவல்கள் குறித்தும் கவனமாக இருங்கள். அவற்றை நம்பியும் பணம் செலுத்தாதீர்கள். அது தொடர்பிலும் விழிப்பாக இருங்கள். அவ்வறான குறுந்தகவல்கள் குறித்து , தொலைத்தொடர்பு வலையமைப்பின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அவர்களின் சேவை நிலையங்களுக்கு சென்றோ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொலைபேசி ஊடாக மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.