முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அங்கு காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன.
இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து, மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமாரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.
இந்நிலையில், சற்றுமுன்னர் குறித்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த இடத்தை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.