கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இராணுவத்தினர் உள்பட 21 பேரையும் வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் முயற்சி சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று (பெப்.9) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் லெப்டினண்ட் கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தரும்புரம் பொலிஸார், சந்தேகநபர்களை கிளிநொச்சி பதில் நீதிவான் தில்லைநாதன் அர்ஜூனா முன்னிலையில் நேற்று நள்ளிரவு முற்படுத்தினர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் ஏ அறிக்கையை முன்வைப்பதாக பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
அதனால் சந்தேகநபர்கள் 21 பேரையும் வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதிவான் தில்லைநாதன் அர்ஜூனா உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் மீது தொல்லியல் ஆய்வியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து பிணை வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.