சட்டவிரோதமான முறையில் இழுவை மடியினைப் பாவித்த ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்ட்ட வழக்கில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி 89 ஆயிரம் ரூபா அபாராதம் விதித்ததுடன் பயன்படுத்தப்பட்ட வலைகளையும் எரித்து அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 2012 ஆம் ஆண்டு 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அதில் 6 வழக்குகள் ஏற்கனவே முடிவடைந்தது. எனினும் யாழ். நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த மிகுதி 5 வழக்குகளும் அண்மையில் முடிவுக்கு வந்தது.மேலும் ஒரு வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் நிலுவையில் உள்ளதுடன் குறித்த வழக்கு 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தற்போது முடிவடைந்த வழக்கின் அடிப்படையில் இழுவை மடியினைப் பாவித்த 5 பேருக்கு 17 ஆயிரம், 27 ஆயிரம் மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா வீதம் 3 பேருக்கும் என 5 பேருகப்கு 89 ஆயிரம் ரூபாவினை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் அபராதம் விதித்ததுடன் சட்டவிரோதமாக பயன்படுத்திய வலைகளை எரித்து அழிக்கும் படியும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குறித்த படகுகளில் இருந்த தடைவிதிக்கப்படாத உபகரணங்கள் உரியவர்களிடம் வழங்கப்ட்டதுடன் வலைகள் நீரியல் வளத்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டது.
இது குறித்து திணைக்களத்தினர் தெரிவிக்கையில்,
சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் உபகரணங்களைப் பாவித்து கடற்றொழில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன் எதிர்வரும் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை மிகவும் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இழுவை மடியினைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடற்றொழில் ஈடுபடுபவர்களில் சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட முறையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கடல்வளங்கள் அழிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் தொழினைப் பெற்றுக் கொள்வதற்கும் சவாலாக அமையும்.
இருப்பினும் குருநகர் மற்றும் வடமராட்சி கடற்பரப்பிலேயே இழுவை மடியின் அத்துமீறல் உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.