வடக்கு மாகாணத்தின் ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை பகுதியில் நடாத்தப்படும் இராணுவ சோதனை நடவடிக்கையினால் தினசாி அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன. இதனால் பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.
வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிக்கு அடுத்தபடியாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனை சாவடி உள்ளது. அதற்கு அடுத்ததாக 15 கிலோமீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டு வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை இடம்பெறுகிறது.
குறித்த நடவடிக்கையால் ஒரு சோதனைச் சாவடியில் 15 நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்படுகின்றது.
கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும்போது நீண்டநேரம் எடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. குறித்த சோதனைகளின் மூலம் சில பேருந்துகளில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுவந்தாலும் பொதுமக்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.