யாழ்ப்பாண நாய்களை சீனாவுக்கு அனுப்பலாமா? அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிரிப்பொலி

யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாய்த்தொல்லையை கட்டுப்படுத்துமாறு விவாதிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து மண்டபத்தில் சிரிப்பொலியுடன் சலசலப்பும் ஏற்பட்டது.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது துறைசார்ந்த மீளாய்வு நடைபெற்றவேளை யாழ்.பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து பேசப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டது.

இவ்வாறான நிலையில் பொதுவாக நாய்த்தொல்லை எங்கும் அதிகரித்துள்ளதாகவும் இதனால் விபத்துகள் இடம்பெறுவதுடன் நாய்கடிக்கு 400 க்கு மேற்பட்டவர்கள் வருடமொன்றில் பாதிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் பங்குபற்றியோரால் குறிப்பிடப்பட்டது. புதிதுபுதிதாக நாய்கள் உணவுள்ள இடங்களுக்கு வருகின்றன. முன்னர் நாய்கள் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டு இறந்த பின் புதைக்கப்பட்டன. மகிந்த சிந்தனையில் நாய்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என
சொல்லப்பட்டது.

இந்நிலையில் மகிந்த சிந்தனை முடிவடைந்து கடந்த 5 வருடமாக நல்லாட்சி நிலவியது. இதன் போது நாய்த் தொல்லையை ஏன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு மகிந்த சிந்தனையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்ந்து இருப்பதால் நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை என பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 3 நாய்க்காப்பகங்கள் உள்ளன. இதனை அதிகரிப்பதுடன் நாய்களுக்கு கருத்தடை செய்வது அதிகமாக்கப்பட வேண்டும். இதன்மூலமே அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை சுகாதார மருத்துவ அதிகாரிகள், மிருக வைத்தியர்கள், உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்த வகையில் முன்னெடுக்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கூட்டத்தில் பங்குபற்றிய ஒருவர் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து நாய்களை பிடித்து கப்பல் மூலம் அனுப்பினால் கட்டுப்படுத்த முடியுமென கூறிய நிலயைில் மண்டபத்தில் சிரிப்பொலி எழுந்து சலசலப்பு ஏற்பட்டது.

Related Posts