கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்படும் ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலைய வர்த்தகர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பல கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து ஆதனவரி அறவிடப்பட்டு வருகிறது.
குறித்த ஆதன வரியானது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீதமாக அறவிடப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டே உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘சுமத்தாதே சுமத்தாதே மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே’, ‘மீண்டெழும் கிளிநொச்சியை வரிச்சுமையால் நசுக்காதே’, ‘நியாயமான வரியை அறவிடு’, ‘மக்களுக்கு சேவையினை வழங்கு’, ‘மரத்தால் வீழ்ந்த மக்களை மாடு மிதித்த கதையாய் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் வர்த்தகர்கள் ஏந்தியிருந்தனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த போராட்டத்தில் வர்த்தக அமைப்புகள், மக்கள் அமைப்புக்கள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.