கூட்டமைப்பின் அமைப்பாளர் வீட்டில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் உண்மையில்லை: யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் என்பவரின் நல்லூரடியிலுள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே நேற்றுக் காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்தச் சம்பவம் ஒரு சோடிக்கப்பட்ட கதை என தெரிவித்துள்ளதுடன், கைக்குண்டு வெடித்ததற்கான ஆதாரங்கள் எவையும் சம்பவ இடத்தில் இல்லை எனவும் கூறினார்.

மேலும் ஒரு கைக்குண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள் எவையுமே சம்பவ இடத்தில் இருக்கவில்லை என்றும் அரசியல் நோக்கங்களுக்காக இது சோடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலேயே பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.

மேலும் நிசாந்தனை பொலிஸார் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டினையும் பொலிஸார் அடியோடு மறுத்திருப்பதுடன, அவ்வாறான சம்பவத்துடன் தமது பொலிஸார் தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைக்குண்டு வெடித்ததாக கூறப்படுமிடத்தில் கைக்குண்டின் கிளிப் காணப்பட்டதாகவும், அதனை பொலிஸார் மீட்டுச் சென்றபோதும் அது குறித்து பொலிஸார் தெரிவித்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.

Related Posts