வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் வடமாகாண ஆளுநரினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாகாண கல்வி அமைச்சினால் யாழ். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பெயர் பட்டியலில் தகுதியான ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெறாத காரணத்தினால், இம்முறைகேடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், இவ்வாசிரியர் இடமாற்றம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றம் குறித்து எதிர்வரும் 22ஆம் திகதி தொழிற்சங்கம் மற்றும் துறைசார்ந்த ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் தேசிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு, தொழிற்சங்கங்களின் ஊடாக இடமாற்றத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலளார் மேலும் கூறினார்.