மணலை பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பத்திர முறை மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. மாறாக மணல் அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதிபத்திர முறைமை நீக்கப்படவில்லை. இவ்விடயத்தில் பழைய முறையிலான சட்ட நடவடிக்கைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ‘ செயற்படும் நாடு ‘ என்ற தொனிப்பொருளிலான வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாரியபொல மற்றும் பொல்கஹாவெல ஆசனங்களை இணைக்கும் ஹங்ஹமுன ஹூமிய வீதி, வாரியபொல ஆசனத்தின் கிடபொல ரத்கரவ் வீதி, ஹிரியால ஆசனத்தின் லெனவ அபன்பொல வீதி , நிக்கவெரட்டிய ஆசனத்தின் பலுகொல்ல வீதி மற்றும் ரஸ்நாயக்க புர கனுகெட்டிய வீதி ஆகிய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரு லோட் மண் 8000 – 45 000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இப்பணம் இடைதரகருக்கே செல்கின்றது. எனவே தான் பாதையில் மணலை கொண்டுச் செல்வதற்கு அனுமதி பத்திரம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மணலை பாதையில் கொண்டு செல்வதற்கு அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதேயன்றி மணலை அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே இருந்த சட்டம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படும். கூடியளவு 35 லோட் மணலை கொண்டுச் செல்வதற்கே பிரதேச செயலகத்தினால் கிராமத்திலுள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
மக்களுக்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பயப்படும் அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. அரசியல்வாதிகளுக்காக நாம் இம்முடிவை எடுக்கவில்லை. நாட்டு மக்களுக்காகவே இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை எடுத்தமைக்காக எமக்கெதிராக சேறுபூச முயற்சிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் எம்முடைய பயணத்தை நிறுத்தாமல் முன்னோக்கிச் செல்வோம் என்பதை எதிர்கட்சியிடம் தெளிவாக நினைவுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.