பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை!

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரங்கள் டெங்கை ஒழிப்பதற்கான அவசர காலமாக தீரமானிக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் டெங்கு பரவும் அபாயம் உள்ள இடங்களைக் கண்டறிந்து காணி உரிமையாளர் அல்லது வீட்டு உரிமையாளருக்கு எதிராக உடனடியாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுகின்ற குப்பைகள் உள்ள இடங்கள் தொடர்பாக விசேட கவனமெடுத்து அவற்றை உடனடியாக அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தமது வீட்டிலுள்ள குப்பைகளைத் தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பதுடன் சுகாதாரப் பரிசோதகர்கள் கிராம சேவகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி சபைகள் என்பன இணைந்து பொதுவான ஒரு செயற்றிட்டத்தை செய்வதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

அதேபோல இத்திட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுடன் பொலிஸார் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிராமங்கள், குறிப்பாக வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படுமென்றும் முடிவு எட்டப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு அவசர இலக்கமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி 021 222 5000 என்ற இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே டெங்கு தொடர்பாக பொதுமக்கள் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாவனையில் இல்லாமல் இருக்கின்ற வெற்றுக் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு துப்பரவாக்கும் பணிகளை உள்ளுராட்சி சபைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாறான வெற்றுக் காணிகள் கண்டறியப்படுமிடத்தே அவை தொடர்பாக உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட வேண்டுமென்றும் அவ்வாறு இல்லாது போனால் அதற்கான தண்டப் பணம் வருடாந்த சோலை வரியுடன் இணைத்து அறவிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts