யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் மாணவர்கள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் தடைகளை மீறி வளாகத்திற்குள் சென்று மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் பொதுச் சுடரினை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்தார்.
இதன்பின்னர் பெருந்திரளான மாணவர்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு தங்கள் கண்ணீர் காணிக்கையை வழங்கியிருந்தனர்.
ஏராளமான மாணவர்கள் வழமை போன்று இம்முறையும் கூடியிருந்ததுடன் தமது அஞ்சலியை செலுத்தினர்.