டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,

பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேசையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் “சூட்டை”, நான் எறிந்த “நீர்” குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகின்றேன்.

என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை பயன் படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன்.

நடந்தவைகளை “எடிட்” செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும் படியும் தெரிவித்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Posts