யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது.
ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியிருந்தது.
எனினும் இந்தத் தகவலை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
அவரது மேன்முறையீடு முன்னாள் தலைமை நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதுடன், மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.