பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சாரதியை காப்பாற்ற பொலிஸார் மக்கள் மீது தடியடி!!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்.

அத்துடன், சாரதியைத் தாக்கியதாக பொதுமக்கள் சிலர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

எனினும் சாரதியை தம்மிடம் ஒப்படைக்கும் வரை வாகனத்தை விடுவிக்க முடியாது என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.30 மணியளவில் கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்திலிருந்து சுமார் 150m தூரத்தில் இடம்பெற்றது.

சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய மாணவன் கேதீஸ்வரன் (வயது -11) உயிரிழந்தார். 9 வயதுடைய மற்றைய மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் இடம்பெறும் விஜயதசமி பூஜைக்காக மாணவர்கள் இருவரும் வெளியில் சென்று வந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.கெங்காதரன் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

“ சாரதி துவிச்சக்கர வண்டி மோதுண்ட இடத்துக்கு சுமார் 25 மீற்றருக்கு முன்னதாகவே சாரதி வாகனத்தின் பிறேக்கைப் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிறேக் சரியாக பிடிபடவில்லை என்பதுடன், வாகனமும் அதிவேகமாக வந்துள்ளது.

துவிச்சக்கர வண்டியை வாகனம் சுமார் 15 மீற்றர்களுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதன்மூலம் சாரதி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார்” என்று நீதிவான் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாரதி கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts