கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தால் பெருவீழ்ச்சி!; சட்டவிரோத மீன்பிடியே காரணமாம்

குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று யாழ்.மாவட்டக் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது குடாநாட்டில் கடலுணவுகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்குக் காலநிலை வேறுபாடு காரணம் அல்ல. குடாக்கடலில் தற்போது கடலுணவுகளின் பெருக்கம் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது. 40 வீதத்தால் இப்போது கடலுணவுகளின் பெருக்கம் குறைவடைந்துள்ளது.

இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் இழுவைப் படகுகள் வடக்குக் கடலில் உள்ள கடல் வளங்களை அள்ளிச் செல்கின்றன. இதனால் எமது கடல்வளம் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது.

இந்தச் செயல் கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த அத்து மீறிய சட்டவிரோத மீன்பிடி குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை எடுத்துக் கூறியும் பயன் இல்லை. பல போராட்டங்களையும் நாம் நடத்தியுள்ளோம்.

எவற்றுக்கும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் குடாக்கடலில் மீன்வளம் கேள்விக் குறியான ஒரு நிலையையே அடையும் என்றார்.

இதேவேளை யாழ். நகரை அண்டிய பிரதான மீன் சந்தைகளில் கடல் உணவுகளின் விலைகள் திடீரென அதிகரித்துக் காணப்படுகின்றன. கொட்டடி, குருநகர், பாஷையூர் சந்தைகளில் கடலுணவுகளின் நேற்றைய விலை வருமாறு:

நண்டு (ஒரு கிலோ) 650 ரூபா, மீன் (பெரிது ஒரு கிலோ)500 ரூபா, மீன் (சிறிது ஒரு கிலோ) 350 ரூபா, கணவாய் (ஒரு கிலோ) 600 ரூபா, இறால் (ஒரு கிலோ) 650 ரூபா, திருக்கை (ஒரு கிலோ) 300 ரூபா, சுறாமீன் (ஒரு கிலோ) 1200 ரூபா.

Related Posts